சிகிச்சையில் குழந்தை இறந்த விவகாரத்தில் போலி மருத்துவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சாமிவேல் மகன் கார்த்திக் இவரது 5 வயது பெண் குழந்தை லட்சிதாவுக்கு கடந்த 7ம் தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரது பெற்றோர் காலை 11 மணியளவில் வேப்பூரில் உள்ள தனியார் மருந்தகத்தில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர் சத்தியசீலன் குழந்தைக்கு சிகிச்சை அளித்துள்ளார். குழந்தையை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அந்த குழந்தை லட்சிதா உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் நல்லூர் வட்டார அரசு தலைமை மருத்துவர் தலைமையிலான மருத்துவ குழுவினர் வேப்பூர் தனியார் மருந்தகத்தில் குழந்தை லட்சிதாவுக்கு சிகிச்சை அளித்த சத்தியசீலன், முறையாக படித்து தேர்ச்சி பெற்று மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவரா எனவும், குழந்தைக்கு தவறான சிகிச்சை ஏதேனும் அளித்துள்ளாரா என்பது குறித்து விசாரிக்க சென்றுள்ளனர்.அப்போது சத்தியசீலனின் பதிவெண் சான்றிதழ்களை அரசு மருத்துவர் தமிழரசன் கேட்டுள்ளார். அப்போது சத்தியசீலன் விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமல் மருந்தகத்தின் பின்பக்க வழியே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து நல்லூர் வட்டார அரசு தலைமை மருத்துவர் தமிழரசன், வேப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் வேப்பூரில் அமைந்துள்ள மருந்தகத்தில் போலி மருத்துவர் சத்தியசீலன் என்பவர் லட்சிதா என்கிற குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்து குழந்தை இறந்தது குறித்து விசாரிக்க சென்றதில் போலி மருத்துவர் சத்தியசீலன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் அங்கிருந்து பின்புறமாக ஓடிவிட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகாரளித்தார்.இதுகுறித்து சத்தியசீலன் மீது வேப்பூர் போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிசெய்து தலைமறைவாக உள்ள போலி மருத்துவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
Tags : Case in 4 sections against the fake doctor in case of death of the child in treatment