டெல்டா மாவட்டங்களில் அறுவடை பணிகள் மழைக்கு வாய்ப்பு விவசாயிகள் கவலை

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை உட்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கிழக்குத் திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் நேற்றிரவு கனமழை பெய்தது. சேந்தமங்கலம், மாங்குடி, கமலாபுரம், வடபாதிமங்கலம், அடியக்கமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில், கடலோர தமிழகம், உள்தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மாநகரில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்று கூறியுள்ளது. நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Tags : டெல்டா மாவட்டங்களில் அறுவடை பணிகள் மழைக்கு வாய்ப்பு விவசாயிகள் கவலை