குமரியில் இறந்த தந்தை உடலை பெற 3 லட்சம்  கேட்ட  மருத்துவமனை : உடலை வாங்க மகள்  மறுப்பு 

by Editor / 24-05-2021 06:28:49pm
குமரியில் இறந்த தந்தை உடலை பெற 3 லட்சம்  கேட்ட  மருத்துவமனை : உடலை வாங்க மகள்  மறுப்பு 



கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த அப்பாவின் உடல் வேண்டாம் என அவரது மகள் மறுத்ததால் தனியார் மருத்துவமனை நிர்வாகம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் அருகே குன்னம் பாறை பகுதியைச் சேர்ந்தவர் ரமசாமி. 69 வயதான இவருக்கும், இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால், இருவரும் மார்த்தாண்டத்தில் இருக்கும் பி பி கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரே அறையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
மனைவி கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், ராமசாமிக்கு உடல்நிலை மிகவும் மோசமானது. அவருக்கு தொடர்ந்து 12 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ராமசாமி உயிரிழந்தார்.இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கினர். இதனிடையே, உயிரிழந்த ராமசாமியின் மருத்துவச் செலவிற்காக 3 லட்சம் ரூபாய்செலுத்தினால்  தான் உடலை தருவோம் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இதனை கேட்டு அவரது மகள் ஜாஸ்மின் அதிர்ச்சி அடைந்தார். இதுவரை ஒன்றரை லட்சம் ரூபாய் கட்டி இருப்பதாகவும் அவர் கூறியும் மருத்தவமனை நிர்வாகம் கேட்கவில்லை. பணம் தரவில்லையென்றால் உடலை தரமாட்டோம் என மருத்துவமனை நிர்வகத்தினர் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜாஸ்மின் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் எங்கள் அப்பாவின் உடலை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறி விட்டு  மருத்துவமனையை விட்டு வெளியேறினார். இதனால் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
இதுகுறித்து ஜாஸ்மின் கூறியபோது மருத்துவமனை நிர்வாகம் அநியாய கொள்ளை அடிப்பதாகவும், ஏற்கனவே ஒன்றரை லட்சம் ரூபாய் கட்டி இருக்கும் நிலையில் மேலும் மூன்று லட்ச ரூபாய் கேட்டதாகவும் அதனால்தான் உடலை வாங்க மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.இதனால் மருத்துவமனை நிர்வாகம் தவித்து வருகிறது.

 

Tags :

Share via