மதுரை தனியார் காப்பகத்தில் 9 சிறுமிகளுக்கு கொரோனா
மதுரை தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 9 சிறுமிகள் உள்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் சபரிநகரில் தனியார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 6 வயதிற்குட்பட்ட 27 சிறுமிகளும், 8 பணியாளர்களும் தங்கியுள்ளனர். அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வரும் இந்த குழந்தைகள் பொதுமுடக்கம் காரணமாக காப்பகத்திலேயே தங்கி இருந்தனர்.
இந்த நிலையில், காப்பக பணியாளர் ஒருவருக்கு சில நாட்களுக்கு சளி, காய்ச்சல் ஏற்படவே அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, காப்பகத்தில் உள்ள குழந்தைகள், பணியாளர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், 9 குழந்தைகளுக்கும், 2 பணியாளர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, அனைவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காப்பகம் முழுமையாக கிருமி நாசினி தெளித்த சுகாதாரத் துறையினர், காப்பகத்தை பூட்டி சீல் வைத்தனர்.
Tags :



















