382வது பிறந்தநாள்: முதல்வர் ‘சென்னை நாள்’ வாழ்த்து
சென்னை மாநகரம் (ஞாயிற்றுக்கிழமை) 382-வது பிறந்த நாளை ‘சென்னை தினமாக’ கொண்டாடுகிறது.
தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்குப் பங்களித்தது தி.மு.க. அரசு என்று சென்னை தினத்தில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையின் நீண்ட பாரம்பரியத்தைச் சிறப்பிக்கும் வகையில் ‘சென்னை தினம்’ ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22 ந் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று 382-வது சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சென்னை மாநராட்சியின் ரிப்பன் மாளிகை உள்ளிட்ட அனைத்துக் கட்டிடங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இதை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சீர்மிகு, சிங்கார - வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை, பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது. தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்குப் பங்களித்தது தி.மு.க. அரசு; இனியும் தொடரும். சென்னை மாநகர மக்களுக்கு MadrasDay வாழ்த்துகள்! என வாழ்த்து செய்தியில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் தலைநகரம், இந்தியாவின் 4-வது பெரிய நகரம், உலகின் 31-வது பெரிய நகரம் என்ற சிறப்பை பெற்றது சென்னை மாநகரம்.
1639-ம் ஆண்டு வணிக நோக்கத்திற்காக இங்கு வந்த கிழக்கிந்திய கம்பெனி, இதே நாளில், தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை (தலைமைச்செயலகம்) அமைந்திருக்கும் பகுதியை, தாமஸ் வெங்கடப்பா நாயக்கர் என்பவரிடம் இருந்து விலைக்கு வாங்கியது. அவரது தந்தையான சென்னப்ப நாயக்கர் பெயரில்தான், பிற்காலத்தில் சென்னப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.17-ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கு வந்த ஆங்கிலேயர்கள், அந்த இடத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினர். அதில், அதிகாரிகள் தங்கினார்கள். கோட்டையை சுற்றி ஊழியர்கள் குடியமர்த்தப்பட்டனர். அதன்பிறகு, அப்பகுதி வளர்ச்சி அடைய தொடங்கியது.
கிழக்கிந்திய கம்பெனியும் நெசவுத்தொழில் மூலம் தன்னுடைய வணிகத்தை பெருக்கியது. இப்போதைய சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் நெசவாளர்கள் அதிகம் வசித்தனர். வண்ணாரப்பேட்டை பகுதியில் துணிக்கு சாயம் பூசும் தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள், செயின்ட் தாமஸ் மவுண்ட் (பரங்கிமலை) பகுதியில் தோட்டத்துடன் கூடிய வீடுகளை அமைத்து வசித்து வந்தனர். அங்கிருந்து தினமும் கோட்டைக்கு வந்து செல்ல புதிய சாலையை அமைத்துக்கொண்டனர். அதுதான் இன்றைய அண்ணா சாலை. இப்படித்தான் சென்னை மாநகரம் விரிவடைந்தது.
ரிப்பன் கட்டிடம், விக்டோரியா ஹால், மெமோரியல் ஹால், ஐகோர்ட்டு கட்டிடம், சென்டிரல்-எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடங்கள், எழும்பூர் அருங்காட்சியகம், ராஜாஜி ஹால், விவேகானந்தர் இல்லம் என்று, ஒவ்வொரு வரலாற்று சின்னங்களும் வெவ்வேறு கதைகளை தாங்கி நிற்கின்றன. சென்னப்பட்டினம், மதராசப்பட்டினம், மெட்ராஸ் என்று பெயர் மாறிவந்த நிலையில், 1996-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி, சென்னை என பெயர் மாற்றம் செய்தார்.இன்றைக்கு வானுயர்ந்த கட்டி டங்கள், சொகுசு நட்சத்திர ஓட்டல்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், நவீன மெட்ரோ ரெயில்கள் என்று அடுக்கடுக்கான அறிவியல் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது சென்னை மாநகரம்.
2004-ம் ஆண்டு முதல் சென்னையின் பிறந்தநாள், சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் இன்று தலா 100 வீதம் 1,500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. மேலும், சிங்காரச்சென்னை குறித்த புகைப்பட போட்டிகள், பாலங்களின் கீழுள்ள இடங்கள், இதர பொது இடங்கள் மற்றும் சுவர்களை மறுவடிவமைக்கும் திட்ட வரைபடப் போட்டிகள் நடக்க இருக்கிறது. 28-ந்தேதி வரை சென்னை மாநகரின் அடையாளத்தை குறிக்கும் சிற்பங்கள் தயார் செய்யும் போட்டி நடத்தப்படுகிறது.
Tags :