ஐபிஎல் போட்டிக்கு தயாராகும் இந்திய கிரிக்கெட் அணிகள்

by Editor / 22-08-2021 05:45:49pm
ஐபிஎல் போட்டிக்கு தயாராகும் இந்திய கிரிக்கெட் அணிகள்

செப்டம்பர் 19 ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டிக்காக ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் தயாராகி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்கியது 2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கியது. 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டன. ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.இதுவரை 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் அங்கு நடைபெற உள்ளது. செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளது. இந்த தொடரின் முதலாவது பாதியில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் மும்பை அணியிடம் சென்னை அணி தோல்வியை தழுவியிருந்தது.

8 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் குறிப்பிட்ட சில வெளிநாட்டு வீரர்கள் துருப்புச் சீட்டாக இருப்பார்கள். அப்படிப்பட்ட சில வீரர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகியிருப்பது சில அணிகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கொரோனா அச்சம், சொந்த விவகாரங்கள் எனக் கூறினாலும் பெரும்பாலான வீரர்கள் அக்டோபரில் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியை மனதில் வைத்தே வீரர்கள் விலகியதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஜோஸ் பட்லர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 2020 ஐபிஎல் ஏலத்தின்போது ரூ.15.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் பாட் கம்மின்ஸ். அமீரகத்தில் தொடர இருக்கும் போட்டிகளில் தான் பங்கேற்கபோவதில்லை என தெரிவித்திருக்கிறார். அதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான ஜோப்ரா ஆர்ச்சரும் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். மேலும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக விடுப்பு எடுத்துள்ளதால் அவரும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடமாட்டார் என்றே தெரிகிறது. இன்னும் ஐபிஎல் அமீரகத்தில் தொடங்க நாள்கள் இருப்பதால் எத்தனை வெளிநாட்டு வீரர்கள் இன்னும் விலகுவார்கள் என்பது தெரியவில்லை.

ஐபிஎல் டி20 தொடரில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில் ஐபிஎல் டி20 போட்டிகள் நடக்கும் அதே மைதானத்தில்தான் டி20 உலகக் கோப்பைப் போட்டிகளும் நடக்க இருப்பதால், அதற்காக ஆயத்தமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளிலிருந்து வெளிநாட்டு வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறு வரும் நிலையில் ஐபிஎல் போட்டிக்காக பயிற்சிகளை மேற்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் என 2 அணியுமே தங்களது வீரர்களை பயோ பபுள் பாதுகாப்புடன் அமீரகம் அனுப்பி உள்ளன. அங்கு கடந்த 13ம் தேதி முதல் குவாரண்டைனில் இருந்த வீரர்கள் தற்போது கொரோனா பரிசோதனைகளில் நெகட்டிவ் என்ற முடிவை பெற்றுள்ளனர்.

இந்த சூழலில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவருமே நேற்று தங்களது முதற்கட்ட பயிற்சியில் ஈடுபட்டனர். துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் இந்த பயிற்சி முகாம் தொடங்கியது.

இந்நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான முதல் பயிற்சியை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் இன்று தொடங்கினர். அந்த அணியில் இடம் பெற்றுள்ள சச்சின் தெண்டுல்கரின் மகனும், வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜூன் தெண்டுல்கரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால், திட்டங்கள் ஏதும் இன்றி பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சைமன் கேடிச் விலகியுள்ளார் என்றும் அணியின் கிரிக்கெட் செயல்பாடுகளுக்கான இயக்குநர் மைக் ஹெசன் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பைக் கூடுதலாக வகிக்கவுள்ளார் என்று அணியின் துணைத் தலைவர் ராஜேஷ் மேனன் தெரிவித்தார்.

இதற்கிடையே, பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா, டேனியல் சாம்ஸ், நியூசிலாந்தின் பின் ஆலென் ஆகியோர் மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களாக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வானிந்து ஹசரங்கா, வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா மற்றும் சிங்கப்பூர் ஆல்-ரவுண்டர் டிம் டேவிட் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இதே போல் டெல்லி கேபிடள்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணி வீரர்களும் ஐக்கிய அமீரகத்திற்கு சென்று பயிற்சியில் ஈடுபட தயராகி வருகின்றனர்.

 

Tags :

Share via