ஏற்காடு கோடை விழா 4-வது நாளான இன்று சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்

by Editor / 29-05-2022 01:24:08pm
ஏற்காடு கோடை விழா 4-வது நாளான இன்று  சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோடை விழா- மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு  கடந்த 25-ந் தேதி ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கியது.

மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வண்ண பூக்கள் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சம் ரோஜாக்களால் மேட்டூர் அணை, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட மாட்டு வண்டி, ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம், சின்சான் கார்ட்டூன், வண்ணத்துப்பூச்சி மலர் அலங்காரத்துடன் செல்பி ஸ்பாட் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்  .


இந்த நிலையில் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி  காண  4 -வது நாள் ஞாயிற்றுக்கிழமையான இன்று  சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.  இதனால் ஏற்காட்டில்  கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு  வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன.  கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சாலையோரங்களில் கயிறு கட்டப்பட்டு வாகனம் நிறுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனத்தை நிறுத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்..

 

Tags :

Share via