மகளுடன் தலைமைச்செயலகம் முன்பு போலீஸ்காரர் மறியல்

by Staff / 13-04-2023 03:30:22pm
மகளுடன் தலைமைச்செயலகம் முன்பு போலீஸ்காரர் மறியல்

சென்னை ஆவடி காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் கோதண்டபாணி. இவர் ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 10 வயதில் மகள் உள்ளார். இவருக்கு 3 வயது முதல் சிறுநீரக பிரச்சினை (Nephrology) உள்ளது. இதன் காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை கடந்த ஐந்து வருடங்களாக உட்கொண்டு வந்துள்ளார்.ஆனால், மாத்திரையின் எதிர்விளைவு காரணமாக கோதண்டபாணியின் மகளின் வலது கால் பாதத்தில் அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக மகளை அனுமதித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கணித்ததன் விளைவாக பாதம் கருகியதால் உடலில் ரத்தம் கெட்டுப்போனதாக கூறப்படுகிறது.
இதனால் தங்களுக்கு அனுமதியின்றி ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) செய்யப்பட்டதன் மூலம் தனது மகளுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாகவும், இவை அனைத்தும் அரசு மருத்துவர்களின் அலட்சியப் போக்கால் நடைபெற்றதாகக் கூறி, கோதண்டபாணி தனது மகளுடன் சென்னை தலைமைச்செயலகம் வாசலில் இன்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் தலைமைச் செயலகம் வெளியே பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் காவல் துறை காவலர் கோதண்டபாணியிடம் சமாதானம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனால் அவர் போராட்டத்தை கைவிட்டு புறப்பட்டுச் சென்றார். அரசு மருத்துவமனைகளின் அலட்சியப் போக்கால் தனது மகள் உடல் பாதிக்கப்பட்டதாகக் கூறி தலைமைக் காவலர் ஒருவர் தலைமைச்செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via