சுற்றுலாப்பயணிகளுக்காக தமிழகத்தில் இன்று முதல் சொகுசு கப்பல் திட்டம் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

by Editor / 04-06-2022 10:07:48am
சுற்றுலாப்பயணிகளுக்காக தமிழகத்தில் இன்று முதல் சொகுசு கப்பல் திட்டம் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் 1076 கி.மீ கடல் பகுதிகள் உள்ளன.இந்த கடல்பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்தும் வண்ணம் தமிழகத்தில் கடல்வழி சுற்றுலாவை ஊக்கபப்டுத்தும் விதமாகவும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், சொகுசு கப்பல் திட்டத்தை செய்படுத்தவேண்டுமென எழுந்த கோரிக்கைகளைதொடர்ந்து  தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், சொகுசு கப்பல் திட்டத்தைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை துறைமுகத்தில் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரும் வகையில் இரண்டு நாள் சுற்றுலா திட்டமும், சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரி சென்று அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் சுற்றுலா திட்டம் என மொத்தம் 2 பேக்கேஜ்களில் இந்த சொகுசு கப்பல் இயக்கப்படவுள்ளது.

முதல்முறையாக இத்தகைய திட்டம் தொடங்கப்படவுள்ளதால் பலரும் மிக ஆர்வமாக உள்ளனர். நாட்டின் பல்வேறு துறைமுகத்தில் சேவை வழங்கிவரும் இந்த கார்டெலியா (Cordelia) கப்பல் நிறுவனம், சென்னையிலும் தனது சேவையை தொடங்குகிறது. 2 வகையான பயணத்திட்டங்களுடன், நட்சத்திர விடுதிகளை மிஞ்சும் அம்சங்களுடனும் சேவை வழங்க உள்ளது கார்டெலியா நிறுவனம்.

இரண்டு நாள் சுற்றுலா திட்டத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக இரு நபருக்கு 40 ஆயிரம் ரூபாயும், ஐந்து நாள் சுற்றுலா திட்டத்துக்கு குறைந்தப்பட்ச கட்டணமாக இரு நபருக்கு 90 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்துக்குள் உணவும், தங்கும் செலவும் அடங்கும். 700 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் 11 தளங்கள் கொண்டது. மொத்தம் 796 அறைகள் உள்ளன. இவை தவிர ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் கலையரங்கம், 4 பெரிய ரெஸ்டாரண்டுகள், மதுகூடம், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, மசாஜ் செண்டர், யோகாசனம் செய்யும் இடம், நீச்சல் குளம், கேசினோ, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது. 

ஒரே நேரத்தில் 1500 முதல் 2000 பயணிகள், மற்றும் 800 ஊழியர்களை இந்த கப்பல் சுமந்து செல்லவுள்ளது.  முதற்கட்டமாக ஒரு கப்பல் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டுக்குள் மேலும் 3 கப்பல்களை இயக்கவுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை சுற்றுலாவுக்கு முக்கிய இடமாக திகழ்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் சென்னைக்கு சுற்றுலாவுக்கு  வரக்கூடிய பயணிகளுக்கு இந்த சொகுசுக் கப்பல் சுற்றுலா திட்டம் மகிழ்ச்சியை ஏற்ப்டுத்தும் விதமாக அமையுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை.

 

Tags : The first luxury cruise project in Tamil Nadu today for tourists

Share via