அரசு ஊழியர், ஆசிரியர்கள் வேலை நிறுத்த நாட்கள் பணி காலமாக்கி அரசாணை

by Editor / 18-10-2021 02:56:42pm
அரசு ஊழியர், ஆசிரியர்கள் வேலை நிறுத்த  நாட்கள் பணி காலமாக்கி  அரசாணை


வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு பணியாளர், ஆசிரியர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


சட்டசபை கூட்டத்தில் பேரவை விதி 110 ன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 2016, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் முந்தைய அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டங்கள் தொடர்பாக, பல்வேறு சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்தக் காலம் மற்றும் தற்காலிகப் பணி நீக்கக் காலத்தினைப் பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதனைப் பரிவுடன் பரிசீலித்து, பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுடைய வேலைநிறுத்தக் காலம் மற்றும் தற்காலிகப் பணிநீக்க காலம் ஆகியவை பணிக் காலமாக முறைப்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அறிவித்திருந்தார்.


மேலும் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில், கலந்தாய்வின்போது அவர்களுக்கான உரிய முன்னுரிமை வழங்கப்படும். மேலும், போராட்டக் காலத்தில் அவர்கள்மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும். அந்த ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக பதவி உயர்வு ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவையும் சரிசெய்யப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அதன்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு பணியாளர், ஆசிரியர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


2016, 2017, 2019-ம் ஆண்டுகளில் வேலை நிறுத்த போராட்ட நாட்களை பணிக்காலமாக முறைப்படுத்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via