6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1597 கோடி இ ழப்பீட்டு தொகை வழங்கும் திட்டம் முதல்வர் துவக்கி வைத்தார்

by Editor / 18-10-2021 02:51:20pm
 6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1597 கோடி இ ழப்பீட்டு தொகை வழங்கும் திட்டம் முதல்வர் துவக்கி வைத்தார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், சம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையான ஆயிரத்து 597 கோடியே 18 லட்சம் ரூபாயினை சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கிடும் விதமாக 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான சான்றிதழ்களை வழங்கி தொடங்கி வைத்தார்.


வேளாண்மையில் தொடர் வளர்ச்சியானது ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். உணவுப் பாதுகாப்புடன் கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு தொடர் வருமானம் கிடைத்திடவும், மாநில அளவில் நிலையான பொருளாதார வளர்ச்சி அடைவதற்கும் வேளாண்மையில் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாததாகும்.


தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசால் வேளாண்மைத் துறைக்கென 2021 -22 ம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி வேளாண்மை துறை என்ற பெயரினை வேளாண்மை உழவர் நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து நிலையான வேளாண் வளர்ச்சிக்கு வழிவகுத்து வருகிறது.


2020- 2021 ம் ஆண்டில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறுவை, சம்பா மற்றும் குளிர்காலப் பருவப் பயிர்கள் 42.75 லட்சம் ஏக்கர் பரப்பளவு பயிர் காப்பீடு செய்வதற்காக, 25.76 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர். குறுவை (காரீப்) பருவத்திற்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.133.07 கோடி, 2 லட்சத்து 2 ஆயிரத்து 335 விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.


முதலமைச்சர் தலைமையிலான அரசால், நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு 2021 -22 ம் ஆண்டில் பயிர்காப்பீட்டுத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ரூ.2 ஆயிரத்து 327 கோடி நிதியினை, 2021 -22 ம் வேளாண் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், 2020 -2021 ம் ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கான தமிழ்நாடு அரசின் பயிர் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1553.15 கோடி, காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.


இதன் காரணமாக, 2020 -2021 ம் ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கு (சம்பா நெற்பயிர் உட்பட) இழப்பீட்டுத் தொகையான ரூ.1597.18 கோடியில், இப்கோ -டோக்யோ பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் ரூ.1,089.53 கோடியும், இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் ரூ.507.65 கோடியும், சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு தற்போது ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான இந்த இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கிடும் விதமாக முதலமைச்சர் இன்று 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை வழங்கி தொடங்கி வைத்தார்.

மேலும் 2021- 2022 ம் ஆண்டு சம்பா பருவ பயிர்களைக் காப்பீடு செய்ய 26.8.2021 அன்று தமிழ்நாடு அரசால் 16.8.2021 ம் நாளிட்ட வேளாண்மை உழவர் நலத்துறை அரசாணை எண்.141 ல் ஆணை வெளியிடப்பட்டு, விவசாயிகள் சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீட்டுக் கட்டணத்தை (பிரீமியத்தை) செப்டம்பர் 15 ம் தேதி முதல் செலுத்தி வருகின்றனர்.


13.10.2021 வரை, 61 ஆயிரத்து 871 விவசாயிகளால் பயிர்க் காப்பீடு செய்யப் பதிவு செய்யப்பட்டு, 67 ஆயிரத்து 556 ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பதிவுசெய்து தங்கள் பயிரை காப்பீடு செய்து கொள்ளுமாறு முதலமைச்சர் வேளாண் பெருமக்களை கேட்டுக்கொண்டார்.


இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, வேளாண்மை - உழவர் நலத்துறை செயலாளர் சி. சமயமூர்த்தி, வேளாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆர்.பிருந்தாதேவி, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பயிர் காப்பீட்டு நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo