செயற்கை கருத்தரிப்பு; பிரசவத்தில் தாய் சேய் மரணம்!

by Editor / 01-05-2021 05:01:20pm
செயற்கை கருத்தரிப்பு; பிரசவத்தில் தாய் சேய் மரணம்!

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகேயுள்ள நெரிஞ்சந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 32), பேக்கரி கடையில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி மகாலட்சுமி (வயது 30). இந்த தம்பதியருக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகிறது. குழந்தை இல்லாததால், வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியிலுள்ள ‘சந்தியா’ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டனர். இந்த மருத்துவமனையில், கருத்தரிப்பு மற்றும் மகப்பேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

சந்தியா பாபு என்பவர் மருத்துவமனையின் இயக்குநராகவும், தலைமை மருத்துவராகவும் இருக்கிறார். மருத்துவர் சந்தியா பாபு அறிவுறுத்தலின்பேரில், மருந்து மாத்திரைகளை உட்கொண்டு கருத்தரித்திரித்திருக்கிறார் மகாலட்சுமி. கர்ப்ப காலத்திலும் மருத்துவமனைக்கு அடிக்கடி வந்து உடற் பரிசோதனை செய்து சென்றிருக்கிறா. இந்த நிலையில், நேற்றய தினம் டெலிவரி தேதி கொடுத்துள்ளனர். மதியம் 2 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் மகாலட்சுமி.

‘சுகப் பிரசவம்தான். அச்சப்படத் தேவையில்லை’ என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரசவ கட்டணத்தில் முன்பணமாக 40,000 ரூபாய் கட்டுமாறு கூறியிருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகள் கழித்து குழந்தை பிறக்கப் போகிறது என்கிற பூரிப்பில் அவர்கள் கேட்ட தொகையை செலுத்தியிருக்கிறார் ராஜா. மருந்து, மாத்திரைக்கென தனியாக 15,000 ரூபாய் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று இரவு 9.30 மணியளவில் மகாலட்சுமிக்கு சாப்பிட இட்லி கொடுத்துள்ளனர். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. மருத்துவர்களின் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்ட மகாலட்சுமிக்கு 11.30 மணியளவில் பெண் குழந்தைப் பிறந்ததாகக் கூறப்படுகிறது. `குழந்தைக்கு மூச்சுப் பேச்சில்லை’ என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், பிரசவித்த மகாலட்சுமியின் உடல்நிலை குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஏதோ விபரீதம் ஏற்பட்டிருப்பதை மட்டும் குடும்பத்தினர் உணர்ந்திருக்கின்றனர். அதுவரை அங்கில்லாத தலைமை மருத்துவர் சந்தியா பாபு 12.30 மணியளவில் மருத்துவமனைக்கு வந்துள்ளார். மருத்துவர்களும், செவிலியர்களும் உள்ளே, வெளியே வேக வேகமாக வந்துச் சென்றதாக கூறுகிறார்கள் உறவினர்கள். பின்னர், 1.30 மணியளவில் கையுறையை கழற்றியபடி வெளியில் வந்த தலைமை மருத்துவர் சந்தியா பாபுவோ, ``தாய், சேய் இருவரும் உயிரிழந்துவிட்டனர். எவ்வளவோ முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை’’ என்று கூறினார் என்கின்றனர். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதிருக்கின்றனர். உறவினர்கள் சிலர் மருத்துவர்களிடம், ``சுகப்பிரசவம் தான் என்று சொன்னீர்களே? உயிர் போகும் அளவுக்கு என்ன நடந்தது?’’ என்று கேட்டதாகவும், அதற்கு முறையான பதிலை மருத்துவர்கள் அளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதையடுத்து, இன்று காலை பொழுது விடிந்ததும் மருத்துவமனை முன்பு திரண்ட மகாலட்சுமியின் உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சத்துவாச்சாரி போலீஸார், அவர்களை சமாதானம் செய்து மகாலட்சுமி மற்றும் குழந்தையின் உடல்களை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமை மருத்துவர் சந்தியா பாபு உட்பட பணியிலிருந்த மருத்துவர்களின் அலட்சியமே தாய், சேய் மரணத்திற்குக் காரணம் என்று குடும்பத்தினர் புகாரளித்தனர். போலீஸாரும் புகார் மனுவைப் பெற்றுக் கொண்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via