முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்பு... விக்ரஹா கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மத்திய அமைசசர்...

by Admin / 28-08-2021 01:06:27pm
முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்பு... விக்ரஹா கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மத்திய அமைசசர்...

முழுக்க முழுக்க உள்நாட்டில் கட்டப்பட்ட விக்ரஹா ரோந்து கப்பலை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
 
கடல் ரோந்து கப்பல்கள் வரிசையில் ஏழாவதாக இடம் பெற்றுள்ள இந்திய கடலோர காவல் படை கப்பலான விக்ரஹா, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தை மையமாகக் கொண்டு செயல்பட உள்ளது. 98 மீட்டர் நீளம் கொண்ட ரோந்து கப்பலில், 11 அதிகாரிகள் மற்றும் 110 மாலுமிகள் இருப்பார்கள்.

லார்சன் அண்ட் டூப்ரோ ஷிப் பில்டிங் லிமிடெட் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த கப்பலில், நவீன தொழில்நுட்ப ரேடார்கள், தொலைதொடர்பு மற்றும் பயணக்கருவிகள், சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

ஒரு  போஃபொர்ஸ் துப்பாக்கி, இரு 12 புள்ளி 7 மில்லி மீட்டர் ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கிகள் உள்ளிட்டவையும் இக்கப்பலில் உள்ளன.
 
ஒரு ஹெலிகாப்டர் மற்றும் 4 அதிவேக படகுகளை சுமந்து செல்லும் இந்த விக்ரஹா ரோந்து கப்பல், அதிகபட்சமாக 48 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.

அவ்வாறு சிறப்பம்சம் கொண்ட ரோந்து படை கப்பல் விக்ரஹாவின் சேவை தொடக்க விழா, சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு, விக்ரஹா ரோந்து கப்பலின் சேவையை தொடங்கி வைத்தார்.

 

Tags :

Share via