ஒடிசாவில் புயல் கரையை கடந்தது

மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில் யாஸ் புயல், ஒடிசா எல்லையில் பாலசோருக்கு 20 கிலோ மீட்டருக்கு தெற்கே கரை கடந்தது.
புயல் கரை கடந்தபோது மணிக்கு 130 கிமீ முதல் 140 கிமீ வரை வேகத்தில் சூறைக்காற்று அடித்தது.
புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. சில இடங்களில் கடலோர கிராமங்களில் கடல் நீர் புகுந்துள்ளது. சாலைகளில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா, துர்காபூர், ஒடிசாவின் புவனேஸ்வர், ஜார்சுகுடா, ரூர்கேலா விமான நிலையங்கள் மூடப்பட்டு, வர்த்தக விமானங்கள் இயக்கப்படவில்லை.
புயல் கரை கடந்தபின்னர் ராணுவம் மற்றும் மீட்பு படையினர் முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரணப் பணியை மேற்கொண்டுள்ளனர். சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை முதலில் வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் பணியும் நடைபெறுகிறது.
ஒடிசாவில் புயல் ஆபத்து உள்ள பகுதிகளில் வசித்த 5.8 லட்சம் மக்களும், மேற்கு வங்காளத்தில் 15 லட்சம் மக்களும் முன்கூட்டியே மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவில் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஒடிசாவில் மரம் விழுந்து ஒருவர் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து முழுவீச்சில் மீட்பு பணி நடைபெறுகிறது.
Tags :