புதிய சிபிஐ இயக்குநர் நியமனத்தில் தலைமை நீதிபதி தலையீடு ?
சிபிஐயின் புதிய இயக்குநராக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சுபோத்குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சிபிஐ இயக்குநர் பதவிக்கு மத்திய அரசின் விருப்பப்பட்டியலில் முதல் இரு இடங்களில் இருந்த அதிகாரிகள் நியமிக்கப்படாமல், தலைமை நீதிபதியின் தலையீட்டின் பேரில் சுபோத்குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டதாகச் செய்திகள் வருகின்றன.
பொதுவாகவே சிபிஐக்கான புதிய இயக்குநரைத் தேர்வு செய்ய பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட குழு கூடும். அதன்படி மே 24 ஆம் தேதி பிரதமர் மோடி, தலைமை நீதிபதி ரமணா, எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி ஆகியோர் கொண்ட குழு கூடியது. ஒன்றரை மணி நேரம் கூடிய இந்தக் கூட்டத்தில், ‘தேர்வு முறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை. இதை ஒத்திவைக்க வேண்டும்’ என்று அதிர் ரஞ்சன் சௌத்ரி கூறினார்.
ஆனால் பிரதமர், தலைமை நீதிபதி ஆகிய இரு உறுப்பினர்களின் முடிவோடு மூன்று பேர் இறுதிப்பட்டியலுக்கு வந்தனர். இந்த மூவர் பட்டியலை மத்திய அமைச்சரவையின் நியமனக் குழுவுக்கு அந்தத் தெரிவுக்குழு அனுப்பி வைத்தது. அதன்படி, 1985ஆம் பேட்ச் மகாராஷ்டிர கேடர் ஐபிஎஸ் அதிகாரியான, தற்போது மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) இயக்குநர் ஜெனரல் சுபோத் குமார் ஜெய்ஸ்வாலை சிபிஐ இயக்குநராக நியமித்திருக்கிறது மத்திய அரசு.
ஜெய்ஸ்வால் பரவலான அனுபவம் வாய்ந்தவர். அவர் சிஐஎஸ்எஃப் தலைவராவதற்கு முன்பு மகாராஷ்டிர மாநில டிஜிபியாகப் பணியாற்றினார். அதற்கு முன் சிபிஐயிலும் பணியாற்றினார்.
“சுபோத் குமார் ஜெய்ஸ்வாலைத் தவிர சிபிஐ இயக்குநருக்கான மூன்று பேர் பட்டியலில் இடம்பெற்ற பிற இரு அதிகாரிகள் முக்கியமானவர்கள். உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் வி.எஸ்.கே.கௌமுடி, பிகார் கேடர் ஐபிஎஸ் அதிகாரி கே.ஆர். சந்திரா ஆகியோர்தான் அவர்கள். அதே நேரம் மத்திய அரசின் சிபிஐ இயக்குநர் பதவிக்கான விருப்பப்பட்டியலில் என்ஐஏ இயக்குநரான ஒய்.சி. மோடி, எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநரான ராகேஷ் அஸ்தானா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் இருவரும்தான் மத்திய அரசின் மிக நம்பகமான அதிகாரிகளாகக் கருதப்படுபவர்கள்.
ஆனால் தேர்வு நடைமுறையில் தலைமை நீதிபதி வலியுறுத்திய ஒரு விஷயம்தான் இவர்களை சிபிஐ இயக்குநர் பதவிக்கு வர முடியாமல் தடுத்துவிட்டது. சிபிஐ இயக்குநர் பதவிக்கு பரிசீலிக்கப்பட வேண்டிய எந்த ஒரு அதிகாரியும் குறைந்தது ஆறு மாதமாவது எஞ்சிய பதவிக்காலம் கொண்டவராக இருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி வலியுறுத்தினார். சிபிஐ தலைவரின் நியமனத்தில் ஆறு மாத கால பதவிக்காலம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
Tags :