புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் 96.13% தேர்ச்சி

by Editor / 20-06-2022 02:16:06pm
புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் 96.13% தேர்ச்சி

தமிழக அரசின் கல்வி பாடத்தை பின்பற்றும் புதுச்சேரி மாநிலத்தில், இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 96 புள்ளி 13 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 4 புள்ளி 8 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளை பொறுத்தவரை 91 புள்ளி 96 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.புதுச்சேரி மற்றும் காரைக்காலில், 14 ஆயிரத்து 423 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 13 ஆயிரத்து 865 மாணவ மாணவிகள் தேர்சி பெற்றுள்ளதாகவும், மொத்தமுள்ள 154 பள்ளிகளில், 68 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகபட்சமாக வணிகவியல் பாடத்தில் 144 மாணவர்களும், மொழிப்பாடம் ஹிந்தியில் ஒருவரும்  முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும், தமிழ் பாடத்தில் யாரும் முழு மதிப்பெண்கள் எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.

அப்போது பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, 12ஆம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டை விட 10 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளதாகவும்,  மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் நீட் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியில் சேரும் வகையில் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.

 

Tags :

Share via