ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது இன்று  உச்சநீதிமன்றம் விசாரணை

by Editor / 20-11-2023 08:12:30am
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது இன்று  உச்சநீதிமன்றம் விசாரணை

தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையிலான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.   இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில், கடந்த 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தன.  அப்போது, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் வைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியது.

மசோதாக்களை கிடப்பில் போட்டு அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்கி வைக்கிறார் என்றும், பணி நியமனம் தொடங்கி எந்த ஒரு கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்க ஆளுநர் மறுப்பு தெரிவிக்கிறார் என்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்புகளைக் கூட கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. அப்போது, இந்த மசோதாக்கள் ஆளுநரிடம் எப்போது அளிக்கப்பட்டது என்றும், எவ்வளவு நாட்கள் நிலுவையில் உள்ளன என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.  அதற்கு 2020-ஆம் ஆண்டு முதல் மசோதாக்கள் கிடப்பில் இருப்பதாகவும், as soon as possible என்ற வாக்கியத்தை ஆளுநர் தவறாக புரிந்து கொண்டு செயல்படுவதாகவும் அரசு தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு அரசு எழுப்பிய பிரச்னைகள் கவலைக்குரியது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம். ஒருவேளை அது நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால் முடிவை நிறுத்தி வைக்கலாம் அல்லது அதில் திருத்தம் மேற்கொள்ள பரிந்துரைத்து அரசுக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கலாம் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார். ஆனால், எதுவுமே செய்யாமல் காலவரையின்றி மசோதாக்களை கிடப்பில் போட முடியாது என்று நீதிபதி திட்டவட்டமாக கூறினார்.  அரசியல் சாசனபடி, மசோதாக்கள் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட உடன், ஆளுநர் உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், எவ்வித காரணமும் குறிப்பிடாமல், ஏற்பிசை அளிப்பதை நிறுத்திவைப்பதாகக் குறிப்பிட்டு 10 மசோதாக்களை கடந்த 13-ஆம் தேதி ஆளுநர் திருப்பி அனுப்பினார். அதனைத் தொடர்ந்து, சிறப்பு சட்டமன்றக் கூட்டம் கடந்த 18 ஆம் தேதி கூட்டப்பட்டு, ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டன. அன்றைய தினமே மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அந்த மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.200 ஆவது பிரிவின் படி உச்சநீதிமன்றம் முடிவெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

 

Tags : ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது இன்று  உச்சநீதிமன்றம் விசாரணை

Share via