ஜூ ஸில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடம் நகைப் பறிப்பு:- இளம்பெண் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நூதன முறையில் பெண்ணிடம் நகை திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
ஆலங்குளம் ஜோதி நகரை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் நெல்லை தென்காசி சாலை பஸ் நிலையம் மேல்புறம் உணவகம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பொன்னுத்தாய் வீட்டில் இருந்தபடியே சேலை வியாபாரம் செய்து வருகிறார். தொழில் சம்பந்தமாக பழக்கம் ஏற்பட்ட ஆலங்குளம் அருகே உள்ள மாயமான்குறிச்சியை சேர்ந்த செல்வம் மனைவி ஜோதிலட்சுமி நாளடைவில் பொன்னுத்தாயுடன் தோழியாக பழகி வந்தார். இந்நிலையில் பொன்னுத்தாயின் வீட்டிற்கு சென்ற ஜோதிலட்சுமி பொன்னுத்தாயிடம் தான் ஏற்கனவே கொண்டு வந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்துள்ளார். குளிர்பானம் கொடுத்த சிறிது நேரத்தில் பொன்னுத்தாய் மயங்கியுள்ளார். மயங்கிய நிலையில் இருந்த அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை கழட்டிய ஜோதிலட்சுமி அதே எடையில் உள்ள கவரிங் நகையை அவருக்கு அணிவித்து உள்ளார். மேலும் மயங்கிய பொன்னுதாயை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிந்து நகை திருடிச் சென்ற ஜோதிலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்ட போது, ஆலங்குளத்தில் உள்ள நகைக் கடை ஒன்றில் திருடிய நகையை விற்றது தெரிய வந்தது. இதையடுத்து நகையைப் பறிமுதல் செய்து, ஜோதிலட்சுமியையும் கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags : ஜூஸ் ஸில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடம் நகைப் பறிப்பு: இளம்பெண் கைது