நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த கார்... வடபழனி 100 அடி சாலையில் பரபரப்பு...
சென்னையில் பெண் ஒருவர் ஓட்டி வந்த கார் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் சில்வியா(60). இவர் துரைப்பாக்தில் உள்ள தன்னுடைய மகளை பார்ப்பதற்காக முகப்பேரில் இருந்து காரை ஓட்டி வந்துள்ளார்.
சரியாக 12.30 மணி அளவில் வடபழனி 100 அடி சாலை அண்ணல் காமராஜர் தெரு-சூளைமேடு சந்திப்பு அருகே பிரபல நட்சத்திர ஹோட்டல் எதிர்புறம் வந்து கொண்டிருந்தபோது, திடீரென காரின் முன் பக்கத்திலிருந்து புகை வந்ததால் அதிர்ச்சி அடைந்த சில்வியா, உடனடியாக காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் மளமளவென கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
தீயானது கார் முழுவதுமாக பற்றி எரிந்த நிலையில் இது குறித்து தகவல் கிடைத்த கோயம்பேடு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கடந்த ஜூன் மாதம் கோயம்பேடு மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார் தீப்பிடித்து காரில் பயணம் செய்த பர்னிச்சர் தொழில் செய்துவரும் அர்ஜூனன் என்பவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் பின் அந்த காரை ஓட்டி வந்த ஓட்டுநர் சுனில் குமார் தீக்காயத்தால் படுகாயமடைந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனின்றி மருத்துவமனையிலயே உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
Tags :