டிசம்பர் இறுதிக்குள் அனைவருக்கும்  தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்பு

by Editor / 28-05-2021 08:37:17pm
டிசம்பர் இறுதிக்குள் அனைவருக்கும்  தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்பு



2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் மக்கள் மத்தியில் பரவுவதை தடுக்க இந்திய குடிமக்கள் அனைவருக்கும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள்  கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெள்ளியன்று தெரிவித்தார். இதற்கு தேவையான 216 கோடி தடுப்பூசி மருந்து குப்பிகளை உற்பத்தி செய்வதற்கான திட்டம் ஒன்றை மத்திய சுகாதார அமைச்சகம் தயாரித்து உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டுக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சென்ற வாரம் குறிப்பிட்டார்.இந்தியாவில் பரவிவரும்  கோவிட்-19 வைரஸ் மேலும் பல மரபணு மாற்றங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . அவ்வாறு மரபணு மாற்றம் பெற்ற வைரஸ் குழந்தைகளை குறிவைத்து தாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை எதிர்பார்த்து இந்தியாவில் சுகாதார வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப் படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த மே 21-ஆம் தேதி நடந்த கோவிட்-19 மறு பரிசீலனை கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். வரும் ஜூலை மாத இறுதிக்குள் இந்தியாவில் 51 கோடி தடுப்பூசி மருந்து குப்பிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து விடும். அதேபோல ஆகஸ்ட் மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மத்திய அரசு 216 கோடி தடுப்பூசி மருந்து குப்பிகளை வாங்கி விடும் என்றும் ஹர்சவர்த்தன் உறுதியாக கூறிவிட்டார்.
தற்பொழுது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் 1.84 கோடி தடுப்பூசி மருந்து இருப்பில் உள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்குள் கையிருப்பை 3 கோடியாக உயர்த்தி விடுவோம் என்றும் ஹர்ஷவர்த்தன் குறிப்பிட்டார்.இவ்வாறு மத்திய அரசு தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் பொழுது எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, மத்திய அரசுக்கு தடுப்பூசி மருந்து தொடர்பான எந்த திட்டமும் இல்லை என்று குற்றம் சாட்டி உள்ளார் எனவும் ஜாவடேகர் தெரிவித்தார்.

 

Tags :

Share via