இந்திய அணி ஜூன் 3-இல் இங்கிலாந்துக்குப் பயணம்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி ஜூன் 3-ம் தேதி இங்கிலாந்து செல்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி ஆட்டத்துக்கு பிரிட்டன் அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததையடுத்து, இரு அணிகளின் பாதுகாப்பு வளையம் குறித்த தகவல்களை ஐசிசி சனிக்கிழமை வெளியிட்டது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளது:"இந்திய அணி கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட சான்றிதழுடன் ஜூன் 3-ம் தேதி தனி விமானம் மூலம் பிரிட்டன் வருகிறது. பிரிட்டன் வரும் முன் இந்தியாவிலேயே 14 நாள்கள் பாதுகாப்பு வளையத்திலிருந்து முறையாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.இந்திய வீரர்கள் தரையிறங்கியதும், நேரடியாக ஹாம்ப்ஷையரில் உள்ள விடுதிக்குச் செல்வர். அங்கு நிர்வகிக்கப்பட்ட தனிமைப்படுத்துதலைத் தொடங்கும் முன் மீண்டும் பரிசோதிக்கப்படுவார்கள்.
தனிமைப்படுத்துதலின்போது முறையாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு சுற்று பரிசோதனை முடிவிலும் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்படுவதற்கு ஏற்ப பாதுகாப்பு வளையத்துக்குள்பட்ட இடத்தினுள்ளே தனிமையில் பயிற்சிகள், சிறியி குழுவினருடன் பயிற்சிகள் அதன்பிறகு பெரிதளவில் வீரர்களை உள்ளடக்கிய பயிற்சிகள் என வீரர்களின் செயல்பாடுகளுக்குப் படிப்படியாக அனுமதி வழங்கப்படும்.
இங்கிலாந்துடனான தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி ஏற்கெனவே பிரிட்டன் வந்தடைந்துள்ளது. நியூசிலாந்து வீரர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய பாதுகாப்பு வளையத்திலிருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான பாதுகாப்பு வளையத்துக்கு ஜூன் 15-ம் தேதி மாறுவார்கள். சௌதாம்ப்டன் வரும் முன், வந்த பிறகும் அவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்."
Tags :