பிறப்பு விகிதம் தொடர்ந்து 5வது ஆண்டாக சரிவு

by Admin / 18-01-2022 11:47:14am
 பிறப்பு விகிதம் தொடர்ந்து 5வது ஆண்டாக சரிவு

உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடு சீனா. ஆனால், அங்கு சமீபகாலமாக குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
 
இதை சரிக்கட்ட சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கி, இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அந்நாட்டு அரசு கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்தது.

மேலும், சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு, பேறுகால விடுமுறை உள்ளிட்ட சலுகைகளை மாகாண அரசுகள் அறிவித்துள்ளன.
 
இந்நிலையில், சீனாவில் 2021-ம் ஆண்டு மக்கள் தொகை அறிக்கையை அந்நாட்டின் தேசிய புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

கடந்த 2021-ல் சீனாவின் மக்கள் தொகை 141 கோடியே 26 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, 2020ல் 141 கோடியே 20 லட்சமாக இருந்தது. இதன்படி கடந்த ஒரு ஆண்டில் மக்கள் தொகை ஆறு லட்சம் அதிகரித்துள்ளது.

இதே காலத்தில் குழந்தை பிறப்பு விகிதம் ஒரு கோடியே ஆறு லட்சமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது என தெரிவித்துள்ளது.

சீனாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருவது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். வேலை செய்யும் திறன் உள்ளோர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் விகிதாச்சாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். 

 

Tags :

Share via