பாபநாசம் உட்பட 4 அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு!

by Editor / 01-06-2021 03:16:41pm
பாபநாசம் உட்பட 4 அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு ஆகிய அணைகளில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தண்ணீர் திறந்துவைத்தார்.

நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, ஞானதிரவியம் எம்பி, அப்துல் வகாப் எம்எல்ஏ, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பவு செய்தியாளர்களிடம் கூறும்போது, 'தமிழக அரசு உத்தரவின்படி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி பாசன விவசாய பெருமக்களுக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் இருப்பை கருத்தில்கொண்டு ஜூன் 1 முதல் 15.10.2021 வரை 137 நாட்களுக்கு 1,400 கனஅடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும்.

இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் (2,260 ஏக்கர்), தெற்கு கோடை மேலழகியான் கால்வாய் (870 ஏக்கர்), நதியுண்ணி கால்வாய் (2,460) ஏக்கர்), கன்னடியன் கால்வாய் (12,500 ஏக்கர்), கோடகன் கால்வாய் (5,048 ஏக்கர்), பாளையங்கால்வாய் (5,974 ஏக்கர்), திருநெல்வேலி கால்வாய் (4,168 ஏக்கர்) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய் (11,807 ஏக்கர்), மருதூர் கீழக்கால் கால்வாய் (7,144 ஏக்கர்), தெற்கு பிரதானக்கால்வாய் (12,309 ஏக்கர்) மற்றும் வடக்கு பிரதான கால்வாய் (10,538 ஏக்கர்) என மொத்தம் 75,078 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன பரப்புகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள் பயன் பெறும். விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்னமாக பயன்படுத்தி சாகுபடி செய்ய வேண்டும். நீர் விநியோக பணியில் பொதுப்பணித்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்றார்.

நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதீக்தயாள், பொதுபணித்துறை செயற்பொறியாளர் ஞானசேகரன், உதவி செயற்பொறியாளர் தங்கராஜ், வேளாண்மை துறை இணை இயக்குநர் கஜேந்திர பாண்டியன், மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடாச்சலம், உதவி செயற்பொறியாளர்கள் சீனிவாசன், அழகுராணி, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல் வடக்கு பச்சையாறு அணையில் இருந்து ஜூன் 1 முதல் ஜூலை 6 வரை 36 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் வரத்தைப் பொறுத்து விநாடிக்கு 100 கனஅடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் மடத்து அணைக்கட்டு (141.60 ஏக்கர்), ஏட்டு துரைசாமி அணைக்கட்டு (430.42 ஏக்கர்), பழம்பத்து அணைக்கட்டு (6.75 ஏக்கர்), பத்மநேரிகால் (681.48 ஏக்கர்), சம்பாகுளம் அணைக்கட்டு (38.40 ஏக்கர்) தேவநல்லூர் அணைக்கட்டு (730.06 ஏக்கர்), இணைப்புக் கால்வாய் (3,005.26 ஏக்கர்) என 5033.97 ஏக்கர் நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெறும்.

 

Tags :

Share via