தமிழ்நாட்டில் ஒருபோதும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.”-உதயநிதி உறுதி.

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் திடலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசின் விரிவான திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களை மக்களிடையே எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது குறித்தும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து பல்வேறு துறைகளில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனை வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்து பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். கடந்தாண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினோம். எல்லா திட்டப் பணிகளையும் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுத்தி உள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வெள்ளை அறிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே பதிலளித்துவிட்டார். தமிழ்நாட்டில் ஒருபோதும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.”
இவ்வாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
Tags : தமிழ்நாட்டில் ஒருபோதும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.”-உதயநிதி உறுதி.