பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 32) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் எதுவும் இல்லை. பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ. 55 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 250 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னை மணலியை சேர்ந்த தமீம் அப்துல் ரகுமான் (39), திருச்சியை சேர்ந்த முகமது ஹபிபுல்லா (30) ஆகியோரின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் இருந்த ரூ. 18 லட்சத்து 97 ஆயிரம் மதிப்புள்ள மின்னணு பொருட்கள், குங்குமப்பூ, வெளிநாட்டு சிகரெட்டுகள் ஆகியவற்றை கைப்பற்றினார்கள். மேலும் அவர்கள் இருவரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்த போது அவர்கள் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ. 62 லட்சத்து 81 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 425 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் 3 பேரிடம் இருந்து ரூ. 1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 675 கிராம் தங்கம், மின்னணு பொருட்கள், குங்குமப்பூ, வெளிநாட்டு சிகரெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags : At the International Airport Rs. 1 crore gold seized