போதையில் மொத்த குடும்பத்தினரையும் குத்திக் கொன்ற கொடூர இளைஞர்

by Staff / 23-11-2022 04:57:17pm
போதையில் மொத்த குடும்பத்தினரையும் குத்திக் கொன்ற கொடூர இளைஞர்

போதை வஸ்துகளுக்கு அடிமையான கேசவின் வயது 25. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் போதை வஸ்துகளில் இருந்து மீள்வதற்காக மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை எடுத்து திரும்பியுள்ளார். இந்த நிலையில் நேற்று, குடும்பத்தினருடன் ஏற்பட்ட  சண்டைக்குப் பின்னர் தனது பெற்றோர், சகோதரி மற்றும் பாட்டி ஆகியோரை கத்தியால் குத்தி கேசவ் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

தென்மேற்கு டெல்லியில் பாலம் என்ற இடத்தில் உள்ள அவர்களது வீட்டில் நேற்றிரவு ரத்தத்துடன் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து கேசவ் கைது செய்யப்பட்டார். கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி தனது குடும்ப உறுப்பினர்களின் கழுத்தை பிளந்து,  பலமுறை அவர்களை குத்திக் கொன்றதாக அதிர்ச்சி தரும் தகவல்களை போலீசார் பகிர்ந்துள்ளனர்.  

கேசவின் பாட்டி திவானா தேவி 75, தந்தை தினேஷ் 50, தாய் தர்ஷனா, சகோதரி ஊர்வசி 18 ஆகியோரின் ரத்தம் தோய்ந்த உடல்கள் தனித்தனி அறைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.  பெற்றோரின் சடலங்கள் குளியலறையிலும், அவரது சகோதரி மற்றும் பாட்டியின் சடலங்கள் மற்ற அறைகளிலும் இருந்து மீட்கப்பட்டுள்ளன. 

குர்கானில் வேலை செய்து கொண்டிருந்த கேசவ் கடந்த மாதம் பணியை ராஜினாமா செய்துள்ளார்.  தீபாவளியிலிருந்து வேலையில்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில்தான், போதையில் இருக்கும்போது, கொலை செய்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு 10.30 மணியளவில் கேசவ் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதே கட்டிடத்தில் குடியிருக்கும் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வருவதற்குள் தப்பித்து செல்வதற்கு கேசவ் திட்டம் தீட்டியதாக தெரிகிறது. அப்போது அங்கு இருந்த உறவினர்கள் அவரை மடக்கிப் பிடித்து வீட்டுக்குள் தள்ளியுள்ளனர். போலீசாரும் விரைந்து வந்து கேசவை கைது செய்தனர்.

டெல்லி வீட்டில் ஷ்ரத்தா வாக்கரை அவரது நண்பரும், காதலருமான ஆப்தாப் பூனாவாலா கொன்ற சம்பவம் இன்னும் மறையவில்லை. தினமும் இந்தக் கொலையில் புதிய செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது நடந்து இருக்கும் இந்தக் கொலையில் டெல்லி நகரமே அதிர்ச்சியில் உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo