சட்டவிரோதமாக தனியார் அருவி வசூலில் வாரிக்குவித்ததால் -இடித்து தள்ளிய மாவட்ட நிர்வாகம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அச்சன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேக்கரை கிராமத்தில் நீர் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்து நீர்வீழ்ச்சிகளை கட்டி உள்ளதாகவும், அதனால் விவசாயத்திற்கு பயன்படும் தண்ணீரானது மாசடைந்து காணப்படுவதாகவும் விவசாயிகள் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் கங்காதேவி தலைமையிலான குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேக்கரை பகுதியில் உள்ள தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வின்போது, நீரோடைகளில் ஆக்கிரமிப்பு செய்து 30க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகளை கட்டியது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், இதுகுறித்த அறிக்கையை வருவாய் கோட்டாட்சியர் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நீர்வளத்துறை சார்பில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள நீர்வீழ்ச்சிகளை 15 நாட்களுக்குள் அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது. கடந்த 14ஆம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்ட சூழலில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவானது நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், அவகாசம் கொடுத்த போதும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் இன்று தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீரோடைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள நீர்வீழ்ச்சிகளை அகற்றும் பணியானது தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தனியார் நீர்வீழ்ச்சிகளில் மலைப்பகுதியில் உள்ள பாறைகளை அரசுக்கு தெரியாமல் சட்ட விரோதமாக வெடிகளை வைத்து பாறைகளை உடைத்து கல் குவாரிகள் போல செயல்பட்டு வந்ததும் அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகவும் தனியாக அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
Tags : The district administration was demolished due to illegal collection of private waterfalls