கனமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

by Editor / 04-08-2022 09:14:32am
கனமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 2 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்றும், இன்றும் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்தது.

இதனிடையே, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

மேலும், இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும், தென்காசி, விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

திருவாரூரில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த தொடர் மழையால் நகரில் தண்ணீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று (வியாழக்கிழமை) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி உத்தரவிட்டுள்ளார். தொடர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஆனால் அதே நேரத்தில் பொதுத்தேர்வு வழக்கம் போல் நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதேபோல், தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

 

Tags : Due to heavy rain, many districts of Tamil Nadu have holidays for schools and colleges

Share via