அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்.

by Editor / 05-08-2022 09:24:33am
 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்.

தமிழகம் முழுவதும் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை இணையவழியாக  நடத்தப்பட்டது.

அதன்படி, நடப்பாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 4 லட்சத்து 7,045 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
கடந்த ஆண்டைவிட கூடுதலாக 70 ஆயிரம் பேர்  கலை, அறிவியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

அதில் 3 லட்சத்து 34,765 பேர் முழுமையாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 98,056 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்தப் பணிகளை முடித்து, கல்லூரி அளவிலான தரவரிசைப் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று முதல் கலந்தாய்வு தொடங்க உள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்குநரகம்  தரப்பில் தகவல் வெளியாகியுள்ளன.

சேர்க்கைக்குத் தகுதிபெற்ற மாணவர்களுக்கு அவர்களின் கைப்பேசி எண், மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய நாள், நேரம் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று, உரிய சான்றிதழ்களுடன் மாணவர்கள் நேரில் கலந்துகொள்ள வேண்டும்.

மாணவர்களின் மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காதவாறு கலந்தாய்வை கல்லூரிகள் நடத்தி முடிக்க வேண்டும். முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குவது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Admission Counseling for Government Arts and Science Colleges starts from today.

Share via