மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்- உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை

by Editor / 12-09-2022 02:38:46pm
மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்- உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை

பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை தடுக்க உரிய தீர்வு காணப்பட வேண்டும், இல்லையென்றால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என மதுரைக்கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியைத் தருகிறது. நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது? என தெரியவில்லை என நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்கக் கோரிய வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது,

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மாணவர்கள் சீருடையுடன் மது அருந்துவது தொடர்பான புகைப்படங்கள் கொண்ட மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதனைப்பார்த்த நீதிபதிகள், இது போன்ற வழக்கைத் தொடர்ந்த மனுதாரரை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது என்றனர்.

இதற்கான உரிய தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என குறிப்பிட்ட நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், மனுதாரர் தொடர்ச்சியாக இந்த வழக்கு தொடர்பான விபரங்களைத் திரட்டவும், அரசுத்தரப்பில் இது தொடர்பாக விளக்கம் பெற்று தரவும் வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

 

Tags :

Share via