அம்பேத்கரும், மோடியும் புத்தக வெளியீட்டு விழாவில் இளையராஜா
இசைஞானியும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் என்ற நிறுவனம் தயாரித்த “அம்பேத்கரும் மோடியும்” என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ளார். இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், இந்த புத்தகம் வெளியீட்டு விழா செப்டம்பர் 16-ம் தேதி நடைபெறுகிறது.
“நதி நீர், பாசனம் தொடர்பான கொள்கை முடிவுகளை அண்ணல் அம்பேத்கர் வகுத்தார் என பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக ஒரு செய்தியை தான் படித்தேன். 2016 ஆம் ஆண்டு முதலீட்டாளர் மாநாட்டில் நதி நீர் மற்றும் பாசனம் குறித்த அமைப்புகள் உருவாக்கப்பட்டதற்கு முக்கிய பங்காற்றியவர் அம்பேத்கர் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல அவரது கருத்தை அமல்படுத்துபவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும் என அந்த புத்தகத்தில் இளையராஜா எழுதியுள்ளார்.
மேலும் அம்பேத்கரும், மோடியும் ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்தவர்கள். அதை ஒழிக்க பாடுபட்டவர்கள். இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளை கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டனர். இப்படி இருவரும் ஒன்றுபடுவதை இந்த புத்தகம் எடுத்துக்காட்டி இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இளையராஜாவின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தது.
இதனிடையே, கடந்த ஜூலை மாதம் மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமிக்கப்பட்டார். இதுகுறித்து பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, “சாதாரண பின்னணியில் இருந்து வந்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார் இளையராஜா. இசையின் மூலம் மனித உணர்வுகளை அழகாய் பிரதிபலித்தவர் இளையராஜா. அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இளையராஜா முன்னுரை எழுதிய ‘Ambedkar and Modi – Reformer’s ideas, Performer’s implementation’ என்ற புத்தகத்தை மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை வெளியிடுகிறது. செப்டம்பர் 16 ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி. ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
Tags :