ஹரி நாடார் மீது மேலும் ஒரு மோசடி புகார்
![ஹரி நாடார் மீது மேலும் ஒரு மோசடி புகார்](Admin_Panel/postimg/harinaadar.jpg)
வங்கியில் கடன் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரி நாடார் மீது மேலும் இரண்டு தொழிலதிபர்கள் மோசடி புகார் அளித்திருக்கின்றனர்.
முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டவர் ஹரி நாடார். இவர் மீது கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் அளித்த மோசடி புகாரின் பேரில், திருவனந்தபுரத்தில் தலைமறைவாக இருந்த ஹரி நாடாரை பெங்களூரு போலீசார் சில தினங்களுக்கு முன் கைது செய்து கர்நாடக சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், ஹரி நாடார் மீது குஜராத் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இருவர் ரூ.100 கோடி வங்கிக்கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.1.5 கோடி பெற்று தங்களை ஏமாற்றியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.
குஜராத்தைச் சேர்ந்த இஸ்மாயில் சக்ராத் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பஷீர் ஆகிய இருவரும் இணைந்து குஜராத்தில் பலசரக்கு ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். அங்கிருந்து அவர்கள் அரபு நாடுகளுக்கு பலசரக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்களது தொழில் பெரும் நஷ்டம் அடைந்துள்ளது. அதனை சரி செய்வதற்காக வங்கியில் ரூபாய் 100 கோடி கடனாகப் பெற முயற்சித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த முகமது அலி மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த அருள்தாஸ் ஆகியோர் மூலம் தொழிலதிபர்களின் விவரங்களை அறிந்த ஹரிநாடார், அந்த இரண்டு தொழிலதிபர்களையும் தொடர்பு கொண்டுள்ளார்.
தான், கேப்பிட்டல் யூபி இன்வெஸ்ட்மென்ட்என்ற கம்பெனியின் ஆசியா நாடுகளுக்கான நிர்வாகி எனவும், இதன் மூலம் இந்தியாவில் பல தொழிலதிபர்களுக்கு 6 சதவீத வட்டியில் அதிக அளவில் கடன் பெற்று கொடுத்துள்ளதாகவும், அதற்கான ஆவணங்களையும் காண்பித்துள்ளார்.இதனை நம்பிய தொழிலதிபர் இருவரையும் ஹரிநாடார் சென்னை தி.நகர் வரவழைத்து ரூபாய் 100 கோடி பணத்தை 6 சதவீத வட்டியில் தான் பெற்றுத் தருவதாகவும், இதற்கு 2 சதவீத கமிஷன் தனக்கு தர வேண்டுமெனவும் கூறியுள்ளார். இதனையடுத்து, மூன்று தவணைகளாக ரூபாய் 1.5 கோடி பணத்தை ஹரி நாடாருக்கு தொழிலதிபர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பின்னர், வங்கிக் கடன் குறித்து கேட்டபோதெல்லாம் தற்போது தேர்தல் வேலைகளில் இருப்பதாகவும், தேர்தல் முடிந்து உடன் வங்கிக் கடன் உடனடியாக பெற்றுத் தருவதாகவும் கூறி ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் வங்கிக் கடன் ஒப்பந்த பதிவுக்கான பத்திரப்பதிவு நடக்கும்போது ஹரிநாடார் கொண்டு வந்த பத்திரங்கள் அனைத்தும் போலியானது என தொழிலதிபர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஹரிநாடார், திருநெல்வேலி வருமாறு இரண்டு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அங்கு சென்ற தொழிலதிபர்கள் தங்களுக்கு லோன் வேண்டாம் எனவும், தாங்கள் செலுத்திய ஒன்றரை கோடி ரூபாயை திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு ஹரிநாடார், விரைவிலேயே அந்த பணத்தை தருவதாக கூறியுள்ளார். அதன் பின்னர் அவர்களுக்கு பதில் அளிக்கவில்லை
இந்த நிலையில், தொழிலதிபர்கள் இருவரும் தாங்கள் ஹரி நாடாரால் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளனர். கடந்த மாதம் தி.நகர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளனர். விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் அறிவுரையின் பேரில் தொழில் அதிபர் பஷீர் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஹரி நாடார் மீது நடவடிக்கை எடுக்குமாறும், தங்களிடமிருந்து ஹரிநாடார் ஏமாற்றிய ரூபாய் 1.5 கோடியை மீட்டுத் தருமாறும் புகார் அளித்தனர்.
ஏற்கெனவே வங்கியில் கடன் வாங்கித் தருவதாக மோசடி செய்யப்பட்டு தற்போது கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரி நாடார் மீது புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது .
Tags :