குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு 

by Editor / 16-06-2021 04:03:10pm
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு 

 

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் குளிர்ந்த காற்று வீசுகிறது. காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணையில் 42 மி.மீ. மழை பதிவானது. அடவிநயினார் அணையில் 23 மி.மீ., கருப்பாநதி அணையில் 16 மி.மீ., செங்கோட்டையில் 19 மி.மீ., தென்காசியில் 13 மி.மீ., கடனாநதி அணையில் 4 மி.மீ., சங்கரன்கோவிலில் 2 மி.மீ., ஆய்க்குடியில் 1.60 மி.மீ. மழை பதிவானது.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடனாநதி அணைக்கு விநாடிக்கு 104 கனஅடி நீர் வந்தது. பாசனத்துக்கு 60 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. அணை நீர்மட்டம் 74.90 அடியாக இருந்தது. ராமநதி அணையில் 40 கனஅடி நீர் வந்தது. 40 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 66 அடியாக இருந்தது.
கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 50 கனஅடி நீர் வந்தது. 25 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 60.70 அடியாக இருந்தது. அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 164 கனஅடி நீர் வந்தது. 20 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. இதனால் இந்த அணைக்கு வரும் 67 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது.
மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெக்கு ஏற்பட்டது. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் அருவிகளில் குளிக்க தடை தொடர்கிறது. கடந்த ஆண்டும் சாரல் சீஸனில் கரோனா பரவல் காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

 

Tags :

Share via