நன்றாக படிக்க சொல்லிய தாயை மகன் கல்லால் அடித்து கொலை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி சுங்கக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அருள் செல்வம் யுவராணி தம்பதியினர். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், தர்ஷினி ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.14 வயதான சஞ்சய் சத்தியமங்கலம் தனியார் பள்ளியிலும், தர்ஷனி ஸ்ரீ புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள தனியார் பள்ளிகளும் கல்வி பயின்று வருகின்றார்.
மகன் சஞ்சய் சரியாக படிக்காததால் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதிகளிலேயே தங்க வைத்து படிக்க வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று சஞ்சய் விடுதியில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டதால் தாய் யுவராணி மகனை கண்டித்துள்ளார். பின்னர் நேற்று இரவு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சமாதானம் அடைந்து நாளை காலை பள்ளிக்கு சென்று நன்றாக படிப்பதாக மகன் கூறியதால் தாய் யுவராணி, மகன் சஞ்சய், மகள் தர்ஷினி ஸ்ரீ ஆகிய மூவரும் உறங்க சென்றுள்ளனர்.
திடீரென நல்லிரவு 12 மணி அளவில் உறங்கிக் கொண்டிருந்த சஞ்சய் எழுந்து ஆத்திரத்தில் வெளியே இருந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து வந்து தாய் யுவராணியின் தலை மீது போட்டு பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடி உள்ளார்.
தாய் யுவராணியின் அலறல் சத்தத்தை கேட்டு அருகே உறங்கிக் கொண்டிருந்த தர்ஷினி ஸ்ரீ அச்சமடைந்து கீழ் வீட்டில் உள்ள தனது சித்தியிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் மேலே வந்து பார்த்தபோது யுவராணி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே யுவராணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தாயை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய சஞ்சயை தேடி வருகின்றனர்.நன்றாக படிக்க சொல்லிய தாயை மகன் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags :