தனியார் பள்ளிகளில் 75% மட்டுமே  கட்டணம் வசூலிக்க  உத்தரவு 

by Editor / 24-07-2021 08:45:06pm
தனியார் பள்ளிகளில் 75% மட்டுமே  கட்டணம் வசூலிக்க  உத்தரவு 



சென்னை: தனியார் பள்ளிகளில் 75% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐஜிசிஎஸ்இ, ஐபி பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை பெற வலியுறுத்தி மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து கூட்டமைப்பினர் கூறும்போது, 'தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டண முறைகேடு நடப்பதை தடுப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டு, தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. 2019 - 20ம் கல்வியாண்டில் குறைந்தபட்சம் எல்கேஜி வகுப்புக்கு ரூ.16,615, அதிகபட்சமாக பிளஸ் 2 வகுப்புக்கு ரூ.25,850 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்டணப் பட்டியலை ஒவ்வொரு தனியார் பள்ளியின் அறிவிப்பு பலகையிலும், பெற்றோர் பார்க்கும்படி வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.


ஆனால் தனியார் பள்ளிகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிடாமல், அதிக கட்டணத்தை பெற்றோரிடம் வசூல் செய்கின்றனர். மேலும், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை கட்ட வற்புறுத்தி வருகின்றனர். கொரோனா தொற்று காலத்தில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தில் 75 சதவீதத்தை இரண்டு தவணையாக கட்டலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் தனியார் பள்ளிகள், அரசு உத்தரவுகளையும், நீதிமன்ற உத்தரவையும் கடைபிடிப்பது இல்லை. எனவே, தனியார் பள்ளி களில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை மட்டுமே மாணவர்களிடம் பெற்றுக்கொள்ள பொள்ளாச்சி சார் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். இந்நிலையில் தனியார் பள்ளிகளில் 75% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

 

Tags :

Share via