கர்நாடக தண்ணீர் தமிழகம் வந்தடைந்தது

by Editor / 23-06-2021 08:45:27am
கர்நாடக  தண்ணீர் தமிழகம் வந்தடைந்தது

கேரளம், கர்நாடக மாநிலம், குடகு உள்ளிட்ட இருமாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடக அளவிலான கிருஷ்ணராஜசாகர், கபினி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது.

கர்நாடக அணைகளின் பாதுகாப்புக் கருதி திங்கள்கிழமை காலை கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 5,000 கன அடி, கபினி அணையிலிருந்து 5,283 கன அடி என மொத்தம் 10,283 கன அடி தண்ணீர், காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட உபரி நீரானது செவ்வாய்க்கிழமை காலை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழக பகுதியான ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

கடந்த சில நாள்களாக தமிழக காவிரிக் கரையோரப் பகுதிகளான பிலிகுண்டுலு, ஒகேனக்கல், அஞ்செட்டி, நாற்றாம்பாளையம், கேரட்டி மற்றும் காவிரி கரையோரத்தைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் மழை பெய்து வந்ததால் அவ்வப்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இந்த மாதத்தில் இருமுறை அதிகபட்சமாக நொடிக்கு 2,000 கனஅடியாக அதிகரித்துக் காணப்பட்டது.

திங்கள்கிழமை நிலவரப்படி நொடிக்கு 1,500 கன அடியாகவும், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 1,200 கன அடியாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்துக் குறைந்து கொண்டே வந்தது. நீர்வரத்துக் குறைந்த நிலையில் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி மற்றும் சிற்றருவிகளில் நீர்வரத்து குறைந்து பாறைகளாகக் காட்சியளித்தன.

தற்போது கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் நொடிக்கு 4,000 கன அடியாக ஒகேனக்கல்லுக்கு வந்துகொண்டிருந்தது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் நீர்வரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர், மேட்டூர் அணையை நாளை காலை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்வரத்து அதிகரிப்பு: செவ்வாய்க்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நீர்வரத்து நொடிக்கு 1,200 கன அடியாக இருந்த நிலையில், கர்நாடக அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் ஒகேனக்கல் பகுதியை வந்தடைந்தது. இதனால் நீர்வரத்து சற்று அதிகரித்து நொடிக்கு 4,000 கன அடியாகத் அதிகரித்தது. மாலை 5 மணியளவில் நொடிக்கு 7,000 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

 

Tags :

Share via