நெல்லை ரெளடி வெட்டிக்கொலை :  5 வருடம் கழித்து கொலை செய்த இளைஞர்கள்

by Editor / 23-06-2021 05:00:28pm
நெல்லை ரெளடி வெட்டிக்கொலை :  5 வருடம் கழித்து கொலை செய்த இளைஞர்கள்


 
நெல்லை அருகே உள்ள கொண்டாநகரம் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன்  மகன் மாரியப்பன். 32 வயது இளைஞரான இவர் மீது இரு கொலை வழக்குகளும் சில வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
கொண்டாநகரம் பகுதியில் ரௌடியாக வலம் வந்த மாரியப்பன் அங்குள்ள காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாகக் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. போலீஸார், மாரியப்பன் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில், கொண்டாநகரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், வெங்கட சுப்பிரமணியன் உள்ளிட்ட நான்கு பேர் சந்தேகத்தின் நேரில் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, பிரகாஷ் என்ற 21 வயது இளைஞரின் நண்பர்கள் ஏழு பேர் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர்.
பிடிபட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில், "இந்தப் பகுதியில் ரௌடியாக வலம் வந்த மாரியப்பன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு எங்களின் நண்பன் பிரகாஷின் தாயிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றான். அப்போது 15 வயது சிறுவனாக இருந்த பிரகாஷால் எதுவும் செய்ய முடியவில்லை.
பிரகாஷின் தாயிடம் மாரியப்பன் நடந்துகொண்ட விதம் எங்களை வேதனை அடைய வைத்தது. அதனால் மாரியப்பனைப் போட்டுத்தள்ள திட்டமிட்டுக் காத்திருந்தோம். அவர் குடித்துவிட்டு காட்டுப் பகுதி வழியாக பைக்கில் வந்தபோது ஏழு பேர் சேர்ந்து அவரை வழிமறித்து வெட்டிச் சாய்த்தோம்" எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலையில் தொடர்புடைய அனைவருமே 30 வயதுக்குக் குறைவானவர்கள். இது வரை 4 பேர் பிடிபட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருக்கும் பிரகாஷ் உள்ளிட்ட மூவரை போலீஸார் தேடி வருகிறார்கள். இந்தக் கொலை சம்பவம் நடந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த நெல்லை மாவட்ட எஸ்.பி-யான மணிவண்ணன், அப்பகுதியில் கூடுதல் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.

 

Tags :

Share via

More stories