குமரி மாவட்ட வனப்பகுதியில் இறந்த பெண் யானை
குமரி மாவட்ட வனப்பகுதிகளான தெள்ளாந்தி, திடல், தடிக்காரன்கோணம் வெள்ளாம்பி பகுதிகளில் விளை நிலங்களில் புகுந்த யானைகளை வனத்துக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் இந்த பணி நடந்தபோது அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பெண் யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க சிரமப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து திருநெல்வேலி மண்டல வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கால்நடை மருத்துவர்கள் டாக்டர் மனோகரன் தலைமையில் 30 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் வந்தனர். அவர்கள் கடந்த 21ம் தேதி மதியம் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் யானைக்கு மயக்க மருந்து செலுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த யானையின் பெண் உறுப்பில் காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அந்த யானையை கட்டி போட்டு அதன் காயத்துக்கு மருந்து வைத்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து மருத்துவ குழுவினர் அங்கேயே தங்கி சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர். இந்த நேரத்தில் மற்ற யானைகள் வந்து பெண் யானையை தாக்காமல் தடுக்கவும், யானைக்கு வேறு பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் வனத்துறையினரும் அங்கு தங்கி பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி பெண் யானை உயிரிழந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலையில் தேனி முதுமலை வனச்சரக மற்றும் ஓசூரில் இருந்து மருத்துவ குழுவினர் வந்தனர். அவர்கள் பிரேத பரிசோதனை செய்து ஆய்வுக்கு தேவையான உடற்கூறுகளை சேகரித்தனர். பின்னர் வனப்பகுதியில் யானை உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இது குறித்து அழகிய பாண்டியபுரம் வனச்சரக அலுவலர் (பொறுப்பு) மணிமாறன் கூறுகையில், இந்த யானைக்கு சுமார் 55 வயது இருக்கும். முதுமையின் காரணமாக கூட்டத்திலிருந்து தனித்து விடப்பட்டது. யானையின் வாயில் புண்கள் இருந்ததால், உணவு உண்ண முடியவில்லை. யானைக்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிர் இழந்து விட்டது என்றார்.
Tags :