கரூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் பேரணியில் தடியடி- வைகோ கண்டனம்.

by Editor / 03-01-2023 09:20:37pm
கரூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் பேரணியில் தடியடி- வைகோ கண்டனம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:நாட்டு விடுதலைக்காக வரி செலுத்த மாட்டேன் என்று உயிர் போகும் என்ற நிலையிலும் வெள்ளையரை எதிர்த்துப் போராடி, கடைசியில் தூக்குமரத்தில் உயிரைத் தியாகம் செய்தவர் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆவார்.

ஜனவரி 3ஆம் தேதி அவரது பிறந்தநாள் ஆகும். அந்த நாளில் தமிழகமெங்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவழியினர் பேரணி நடத்தி, தேவராட்டம் ஆடி கொண்டாடுவது வழக்கம்.

இம்முறை கரூரிலும் அதேபோல பேரணியாகச் சென்று தேவராட்டம் ஆட முயன்ற இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது மன்னிக்க முடியாதது ஆகும். வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் அமைதி காத்து, தொடர்ந்து இந்தப் பேரணியை நடத்தியிருக்கிறார்கள்.

தடியடி நடத்திய காவல்துறைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்குக் காரணமான காவலர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via