கடலூர் அருகே சிக்கிய 5 பேர் வங்கதேச தீவிரவாதிகளா?

by Editor / 03-07-2021 08:44:27am
கடலூர் அருகே சிக்கிய 5 பேர் வங்கதேச தீவிரவாதிகளா?

கடலூர் அருகே பெரியகங்கனாங்குப்பத்தில் தங்கியிருந்தது தீவிரவாதிகளா என 5 பேரை பிடித்து மத்திய உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடலூர் அருகே உள்ளது பெரிய கங்கனாங்குப்பம் கிராமம். இப்பகுதியில் இருந்து வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாட்டுகளுக்கு அடிக்கடி தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உதவியுடன் இன்டர்நெட் வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தொடர்பு குறித்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சந்தேகத்தின்பேரில் மத்திய உளவுத்துறையின் சென்னை மற்றும் கடலூர் கண்காணிப்பு பிரிவு போலீசார், கடலூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர் மேற்பார்வையில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பெரியகங்கனாங்குப்பம் கிராமத்தில் விநாயகா நகர் பகுதியில் சிலரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த வீட்டில் வசித்தவர்களை நேற்று பிற்பகல் கடலூர் ஆள்பேட்டை மேம்பாலத்தில் இருந்து பின்தொடர்ந்தனர். பின்னர், அவர்களது வீட்டிற்குள் சென்றதும் சுற்றிவளைத்து பிடித்தனர். இதில் மூன்று ஆண், 2 பெண் மற்றும் குழந்தை என அனைவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தி, வங்க மொழியில் மட்டுமே பேசியுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ள அழைத்துச்சென்றனர்.

 

Tags :

Share via