‘மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் அம்சம் மத்திய பட்ஜெட்டில் இல்லை’ – மம்தா பானர்ஜி

by Staff / 01-02-2023 04:21:15pm
‘மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் அம்சம் மத்திய பட்ஜெட்டில் இல்லை’ – மம்தா பானர்ஜி

2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். 7 முன்னுரிமைகளை அடிப்படையாக கொண்டு இந்த பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பு முறைப்படி ஆண்டுக்கு 7 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி தள்ளுபடி கிடைக்க வகை செய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், “இந்த பட்ஜெட் எதிர்காலம் சார்ந்து எந்த அம்சமும் இல்லை. ஏழைகளுக்கு எதிராகவும் மக்களுக்கு எதிராகவும் இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. இந்த பட்ஜெட் ஒரு தரப்பு மக்களுக்கே பயனுள்ள வகையில் அமைந்திருக்கிறது. நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறிந்த்து இந்த பட்ஜெட்டில் எந்த கருத்தும் இடம் பெறவில்லை. 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய மம்தா, தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு எந்த வித பயனையும் அளிக்கப் போவதில்லை. இந்த பட்ஜெட்டில் நம்பிக்கையளிக்ககூடிய எந்த அம்சமும் இல்லை. இது ஒரு ‘கறுப்பு’ பட்ஜெட். எனக்கு ஒரு அரைமணி நேரம் தாருங்கள், ஏழைகளுக்கு எப்படிப்பட்ட பட்ஜெட்டை உருவாக்க வேண்டும் என்று உங்களுக்கு காண்பிக்கிறேன் என்று கூறினார்.

 

Tags :

Share via