ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் – ஓபிஎஸ் பேட்டி

by Staff / 02-02-2023 04:47:32pm
ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் – ஓபிஎஸ் பேட்டி

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூறியதாவது:  மத்திய அரசின் பட்ஜெட், இந்தியாவை அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒரு பட்ஜெட்டாக உள்ளது. மத்திய பட்ஜெட்டின் சாராம்சங்களை தமிழக அரசு புரிந்து கொண்டு மக்களின் நலனுக்காக திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். பட்ஜெட்டின் விரிவான அறிக்கையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நம்பிக்கை உள்ளது.

தற்போது வரை அதிமுகவின் சட்ட விதிகளின் படி, ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் உள்ளோம். இருவருக்கும் 2026 ஆம் ஆண்டு வரை பதவி காலம் உள்ளது. இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு வந்தால் கையொப்பம் இடுவேன். இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன்.

அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும், தமிழக மக்களும், பாஜகவும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என விரும்புகிறார்கள். எங்கள் தரப்பில் தேசிய ஜனநாயக கூட்டணியின் படியே முறையாக அறிவிப்பு வெளியிடப்படுகிறது. கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு உள்ளேன். மீன்வளம், ஆய்வாளர்களின் கருத்துக்கள், சுற்றுப்புற சூழல் தொடர்பான கருத்துக்களை கேட்டு உள்ளேன். தமிழக அரசிடம் பதில் வந்தவுடன் எனது நிலைப்பாட்டை கூறுவேன்.  இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

 

Tags :

Share via