புல்லட் வாகனத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் 

by Editor / 26-10-2024 11:25:59pm
புல்லட் வாகனத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் 

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் குற்ற செயல்கள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், நடைபெற்ற குற்ற சம்பவங்களின் குற்றவாளிகளை கண்டறியும் விதமாக பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து செங்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  V.R.ஶ்ரீனிவாசன்  முன்னிலையில் செங்கோட்டை காவல் நிலைய பெண் காவலரை வைத்து இன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். மேலும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடு, கடை, அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தினார்.

போதை பொருட்கள் இல்லாத மாவட்டத்தை உருவாக்கும் பொருட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் செங்கோட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி, போதை பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவி எண் 98840 42100 தெரிவிக்க அறிவுறுத்தினார். மேலும் போதையில்லா தென்காசி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று பொதுமக்களுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மற்றும் காவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  செங்கோட்டை மற்றும் புளியரை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தலைக்கவசம் வழங்கி, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் மற்றும்  சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

தீபாவளி நேரங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் புல்லட் வாகனத்தில் ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களோடு 32கிலோ மீட்டர் தொலைவு வரை ரோந்துப்பணியில் ஈடுபட்டார்.பொதுமக்கள் மத்தியில் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளரின் நடவடிக்கை வரவேற்பை பெற்றுள்ளது.

 

Tags : புல்லட் வாகனத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் 

Share via