கே.எப்.ஜே. சொத்துக்கள் பறிமுதல்  பாதிக்கப்பட்ட 1638 பேருக்கு பணத்தை திருப்பி தர முடிவு

by Editor / 27-09-2021 07:05:10pm
கே.எப்.ஜே. சொத்துக்கள் பறிமுதல்  பாதிக்கப்பட்ட 1638 பேருக்கு பணத்தை திருப்பி தர முடிவுகேரளாவை தலைமையிடமாகக் கொண்ட கே.எப்.ஜே ஜூவல்லரி நகை கடை சென்னையில் மயிலாப்பூர், அண்ணா நகர், வளசரவாக்கம், புரசைவாக்கம் ஆகிய இடங்களில் இயங்கி வந்தன. இந்த நிறுவனம் தங்க நகை சேமிப்புத் திட்டங்களை கவர்ச்சிகரமாக அறிவித்தது. இதையடுத்து பொதுமக்கள் ஆர்வமுடன் நகை சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்தனர்.
அந்தத் திட்டத்தின் அடிப்படையில் நகைச் சீட்டு முதிர்வு தேதி முடிந்த பின்னர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தையும் தங்கத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் பிரச்சனைகள் எழுந்தன. திட்டங்கள் முடிவடைந்த சிலருக்கு நிறுவனம் சார்பில் பணம், தங்கம் கொடுக்காமல் காசோலைகள் கொடுக்கப்பட்டன. அந்த காசோலைகளும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டன .


இதை அடுத்து ஒவ்வொரு கிளையிலும் இதே போல் பல பேர் பாதிக்கப்பட்டு கொந்தளித்து வந்தனர். இவர்களெல்லாம் சென்னையில் ஆங்காங்கே உள்ள காவல் நிலையங்களில் புகார் கொடுத்தனர். மொத்தம் 1638 பேர் இந்த நகை சேமிப்புத் திட்டத்தில் இணைந்து தங்கள் பணத்தையும் நகைகளையும் கட்டி பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து1,638 பேரின் புகார்கள் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. 


பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணைநடத்தி வந்த நிலையில், கே.எப்.ஜே ஜுவல்லரி நிறுவனத்தின் பெயரிலும் நிர்வாக இயக்குனர் சுனில் செரியன் மற்றும் இயக்குனர் சுஜித் செரியன், மேலாளர் ஆகியோர் மீது தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது . இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு ஓராண்டு கடந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் திடீரென்று நஷ்டம் ஏற்பட்டுவிட்டது.


வாடிக்கையாளர்கள் எல்லாம் கொடுத்த பணத்தை வெவ்வேறு கிளைகளில் போட்டு தொழிலில் முதலீடு செய்திருக்கிறோம். ஒட்டுமொத்தமாக எல்லாரும் திடீரென்று கேட்பதால் கொடுக்க முடியவில்லை. அதனால் சொத்துக்களை விற்று திரும்பத் தந்து விடுகிறோம் என்று பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் கேஎப் ஜே நிர்வாகிகள் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தனர். அதன்பின்னர் 8 மாதங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்காததால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கேஎப்சி நிர்வாகிகள் சுனில் செரியன் மற்றும் சகோதரர் சுஜித் செரியன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 


இந்த சிறப்பு நீதிமன்றத்தில் சுஜித் , சுனில் இருவரும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஒரே நேரத்தில் எல்லோரும் கேட்பதால் கொடுக்க முடியவில்லை என்று தங்கள் தோல்விக்கான காரணத்தை தெரிவித்திருந்தனர். தங்களின் சொத்துக்களை விற்று பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர் . ஆனாலும் சாட்சிகளை இவர்களை வெளியே விட்டால் சாட்சிகளைக் கலைக்க நேரிடும் என்று சொல்லி அவர்களின் ஜாமீனுக்கு பொருளாதார குற்றப்பிரிவு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.


இந்த நிலையில் கேஎஃப் ஜே நிர்வாகிகளுக்கு சொந்தமான சென்னையில் உள்ள இரண்டு சொகுசு பங்களாக்களை பறிமுதல் செய்து இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவிக்கின்றனர். அந்த 2 சொகுசு பங்களாக்களில் தற்கால மதிப்பீட்டை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட 1638 பேருக்கு அளிக்கவேண்டிய 106 கோடி ரூபாயை திரும்ப செலுத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் கேஎப்ஜே மேலாளரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

 

Tags :

Share via