பெண்ணின் மரணத்திற்கு பானிபூரி காரணமா? தீவிர விசாரணை

by Editor / 27-09-2021 07:06:57pm
பெண்ணின் மரணத்திற்கு பானிபூரி காரணமா? தீவிர விசாரணை

ஈரோடு சூரம்பட்டி காந்திநகர் என்.ஜி.ஜி.ஓ. காலனி சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவருடைய மகள் 34 வயது ரோகிணிதேவி எம்.சி.ஏ. பட்டதாரி. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோகிணி தேவி அவரது சகோதரர்கள் வாங்கி கொடுத்த பானிபூரியை சாப்பிட்டுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டார். மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனின்றி ரோகிணி தேவி பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரோகிணி தேவி உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, இறப்புக்கான காரணம் கண்டறிவதற்காக உடல் உறுப்புகள் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த சம்பந்தப்பட்ட கடையை ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூட உத்தரவிட்டனர். அதன்படி அந்த உணவகம் மூடப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அதிகாரி தங்க விக்னேஷ் தலைமையில் அதிகாரிகள் 26 ந் தேதி ஈரோட்டில் உள்ள சாலையோர பானிபூரி கடைகள், உணவகங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஈரோடு மீனாட்சிசுந்தரனார் சாலை, காளைமாடு சிலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோர கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. காலாவதியான உணவுப் பொருட்கள் பயன்படுத்தப் படுகிறதா? என அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதில் சில சாலையோர கடைக்காரர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் உள்ளது தெரிய வந்தது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தியது தெரியவந்தது. அவர்களுக்கு அதன் அவசியம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கூறும் போது, 'ரோகிணி தேவி பானிபூரி சாப்பிட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது.

அவர் பானிபூரி மட்டுமல்ல அவரது குடும்பத்தினருடன் குஸ்கா, ஆம்லெட் போன்ற உணவுகளையும் சாப்பிட்டு உள்ளார். ரோகிணி தேவியின் உடற்கூறு பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே அவர் சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும். இதைத்தொடர்ந்து ஈரோட்டில் சாலையோர பானி பூரி, உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டோம். இது குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. பானிபூரி கடைகளில் அவர்களே உணவு தயாரித்து விற்பனை செய்கிறார்கள். எனவே பானிபூரி எப்போது தயாரிக்கப்பட்டது. அதன் காலாவதியாகும் தேதி குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். இது தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடத்தியுள்ளோம்' என்றார்.

 

Tags :

Share via