உலக நாடுகளின் பசிப் பட்டியலில் இந்தியாவுக்கு 101வது இடம்

by Editor / 15-10-2021 04:03:30pm
உலக நாடுகளின் பசிப் பட்டியலில் இந்தியாவுக்கு 101வது இடம்

உலக நாடுகளின் பசிப் பட்டியலில் 94வது இடத்தில் இருந்த இந்தியா ஒரே ஆண்டில் 101வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டசத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து பட்டினிக் குறியீடு பட்டியல் வெளியிடப்படுகிறது. ஐயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் ஆகிய அமைப்பும் சேர்ந்து பட்டினிக் குறியீடு பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது.


ஊட்டச்சத்து குறைபாடு, 5-வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயர்த்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் ஆகிய காரணிகளை இந்தப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் மரணம் உள்ளிட்ட நான்கு அம்சங்களின்படி 2021ம் ஆண்டுக்கான உலக பட்டினி ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், மொத்தம் இடம் பெற்றுள்ள 116 நாடுகளில் இந்தியா 101-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளத்தை விட இந்தியா பின் தங்கியுள்ளது.


அதன்படி, இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 94வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 101வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நமது அண்டை நாடான நேபாள், வங்கதேசம் 76வது இடத்திலும், பாகிஸ்தான் 92வது இடத்திலும் உள்ளது. இந்தியாவிற்கு பின்னால் பப்புவா நியூகினியா (102), ஆப்கானிஸ்தான், நைஜீரியா (103), காங்கோ (105) ஆகிய சிறிய நாடுகள் மட்டுமே உள்ளன. கடைசி இடமான 116வது இடத்தில் சோமாலியா உள்ளது.


இந்தியாவில் குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது 17.3 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.


அதேபோல், பட்டினி மிகவும் கொடூரமாக உள்ள 31 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது.கொரோனா பரவலால் கடந்த ஒரே ஆண்டில் கோடிக்கணக்கான இந்தியர்கள் வறுமையின் பிடியில் சிக்கியிருப்பது இந்த ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. பட்டினியை ஒழித்த முதல் பத்து நாடுகளில் பிரேசில், சிலி, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

 

Tags :

Share via