கேரளா மாநிலம் வயநாடு சூரல்மலைப் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

கேரளா மாநிலம் வயநாடு அருகே சூரல்மலைப் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி ஏளனமானோர் பலியாகி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.7 பேர் மட்டும் தற்போது பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் நிலச்சரிவில் சிக்கிய 30 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கிய 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வயநாடு சூரல்மலை மீட்புப் பணியில் விமானப் படை ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டு வருகின்றன. கேரளாவின் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அப்பகுதியில் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் வயநாடு சூரல்மலை பகுதியில் கேரளா மின்சார வாரியம் கட்டிய அணையும் நிரம்பி இருக்கிறது. இந்த அணையின் நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வயநாடு சூரல்மலை பகுதியில் இடைவிடாது கொட்டிய கனமழையால் நேற்று காலை முதலே லேசான நிலச்சரிவுகள் சில இடங்களில் ஏற்பட்டன. பெரும் எண்ணிக்கையிலான கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்திருந்தது. ஏராளமான வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன. இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது. அட்டமலையில் இருந்து முண்டகை வரையிலான ஒரே ஒரு பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. வயநாடு சூரல்மலை நிலச்சரிவில் 500 வீடுகள் சிக்கி இருக்கின்றன. இந்த வீடுகளில் சிக்கிய 1000 பேரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
முண்டல் பகுதியை சென்றடைவதற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் நிலச்சரிவில் சிக்கியவர்களையும் படுகாயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
கேரளாவில் கனமழை காரணமாக ஆங்காங்கே முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக நிறுத்தப்பட்ட அத்தனை பேரிடர் மீட்பு குழுக்களும் ஒட்டுமொத்தமாக வயநாடு சூரல்மலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கேரளாவில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

Tags : கேரளா மாநிலம் வயநாடு அருகே சூரல்மலைப் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன