அத்திப்பள்ளி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு.

by Editor / 08-10-2023 10:28:46am
அத்திப்பள்ளி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் சாலையின் இருபுறமும் ஏராளமான பட்டாசு கடைகள், குடோன்கள் உள்ளன. தீபாவளி பண்டிகை காலங்களில் இங்கு அதிகளவில் பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். கர்நாடகம் மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இங்கு வந்து பட்டாசு வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில், அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடைகளுக்கு 3 சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் அடங்கிய அட்டை பெட்டிகள் நேற்று வந்து இறங்கின. அப்போது பட்டாசு பெட்டிகளை இறக்கும்போது திடீரென பட்டாசுகள் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிவிபத்து தொடர்பாக கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டாசு கடை வெடிவிபத்து குறித்து விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்படுள்ளது. பட்டாசு கடை உரிமம் தொடர்பாகவும், தீ விபத்து குறித்தும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களிடம் புகார் பெறப்பட்டு வழக்கு பதிவு செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். தர்மபுரியில் இருந்து பட்டாசுகள் கொண்டு வரப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Tags : அத்திப்பள்ளி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு.

Share via