தீரன் சின்னமலைக்கு  தமிழக அரசு மரியாதை

by Editor / 03-08-2021 03:36:56pm
தீரன் சின்னமலைக்கு  தமிழக அரசு  மரியாதை

 

 

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தினையொட்டி சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரம், சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவு சின்னத்திலும் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை மலர்வளையங்கள் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.


சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலை சூழ்ச்சியின் காரணமாக ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு ஆடி 18ம் தேதி சங்ககிரி மலைக்கோட்டையில் தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்பட்ட நினைவு தினத்தினையொட்டி கோட்டையின் அடிவாரத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கும், அதே போல் தமிழக அரசு சார்பில் ஈரோடு - பவானி பிரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள தீரன்சின்னமலை நினைவு சின்னத்திலும் மாநில உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் மலர்வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.கார்மேகம், மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஆலின்சுனோஜா, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் எம்.ஸ்ரீஅபிநவ் , சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன், சங்ககிரி வருவாய்கோட்டாட்சியர் கோ.வேடியப்பன், வட்டாட்சியர் எஸ்.விஜி, சங்ககிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (நிர்வாகம்) எஸ்.ராமசந்தர், (கிராம ஊராட்சி) என்.எஸ்.ரவிச்சந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.


சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலைக்கு அரசு உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள், கொங்கு அமைப்புகள் சார்பில் மரியாதை செலுத்த உள்ள நிலையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.ஸ்ரீஅபிநவ் மேற்பார்வையில் சங்ககிரி காவல் துணை காண்காணிப்பாளர் சி.நல்லசிவம் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட காவலர்கள் சங்ககிரி நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காவல்துறை சார்பில் அனைத்து நிகழ்ச்சிகளும் வீடியோ பதிவு செய்யப்பட்டன.

 

Tags :

Share via