துருக்கி, சிரியா நாடுகளில் பயங்கர நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 1,300 ஆக அதிகரிப்பு
துருக்கியில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 1300 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளது.
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 17.9 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நடுக்கம் ஒரு நிமிடம் நீடித்ததாகவும், வீடுகளில் உள்ள ஜன்னல்கள் உடைந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், 15 நிமிடங்களுக்குப் பிறகு, அப்பகுதியில் 6.7 ரிக்டர் அளவு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. தியார்பாகிர் உட்பட 10 நகரங்கள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 100 கட்டிடங்களுக்கு மேல் இடிந்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி- சிரியா எல்லை அருகே அமைந்துள்ளதால் கிளர்ச்சியாளர்கள் உள்ள பகுதியில் எவ்வளவு பேர் பலியாகியுள்ளனர் என்பது தெரியவில்லை. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சிரியா பகுதிகளில் பாதிக்கப்பட்ட்வர்கள் உதவி செய்வதாக அறிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க ஐரோப்பிய ஒன்றியம் மீட்பு படையினரை அனுப்பியுள்ளது. இந்தியா தரப்பிலிருந்து மருத்துவர் குழு, அத்தியாவசிய மருந்துகளை அனுப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேசிய பேரிடர் மீட்பு படையிலிருந்து 100 வீரர்களை இந்தியா அனுப்பியுள்ளது.
இந்நிலையில் தெற்கு துருக்கியில் உள்ள கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள எல்பிஸ்தான் மாவட்டத்தில் மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ள நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Tags :